HomeReviewயானை முகத்தான் ; விமர்சனம்

யானை முகத்தான் ; விமர்சனம்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை வைத்து பக்தி மற்றும் புராண படங்கள் எடுத்த காலம் ஒன்று உண்டு. இப்போது உள்ள சமூகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவரே வந்து சொன்னால் கூட நம்புவதற்கு யோசிக்கும் அளவில் தான் சூழல் இருக்கிறது. இதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் யானை முகத்தான்.

ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் திலக் யாரிடமும் சொன்ன சொல்லை காப்பாற்றுமாறு நடந்து கொள்வதில்லை. தனது வீட்டு ஓனர் ஊர்வசியையும் தன் ஆட்டோவில் பயணிக்கும் சில பயணிகளையும் கூட ஏமாற்றுபவர். அவர் தனது நண்பரான ஹரிஷ் பெராடி தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை மகளின் திருமணத்திற்காக கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால் கொடுக்கிறேன் என கூறினாலும் அவரால் உரிய நேரத்தில் பணம் புரட்ட முடியவில்லை.

இந்த நேரத்தில் விநாயக கடவுளை நினைக்கிறார் ரமேஷ் திலக். விநாயகர் யோகி பாபு உருவத்தில் எளிய மனிதராக அவருக்கு காட்சியளிக்கிறார். ஆனாலும் அவரை முதலில் நம்ப மறுக்கும் ரமேஷ், விநாயகரின் அறிவுரைப்படி ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்கிறார். அதனால் அவரது பிரச்சனைகள் தீர்ந்ததா ? விநாயகரின் வருகையால் என்ன மாற்றங்கள் அவரது வாழ்வில் நடந்தன என்பது மீதிக்கதை.

நகைச்சுவை மட்டுமல்லாமல் கொஞ்சம் தத்துவார்த்தமான கதையாகவும் இந்த யானை முகத்தான் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். விநாயகர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அமைந்து விட்டார் யோகி பாபு. அதேசமயம் நகைச்சுவை காட்சிகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு ஆன்மீக தத்துவங்கள் பேசி ஆச்சரியப்பட வைக்கிறார். இடைவேளைக்கு முன்பு ஒரு சில காட்சிகளே வந்தாலும் இடைவேளைக்கு பின்னர் படம் முழுக்க வந்து தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்

படத்தின் நாயகன் என்றால் அது ரமேஷ் திலக் தான்.. படம் நெடுக தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பாதிக்கு மேல் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். முதலில் தனக்கு உதவி செய்த நபர்களை கண்டு கொள்ளாமல் அவர்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்வதும், பின்னால் தன் தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தம் தேடுவதுமாக நகைச்சுவை, குணச்சித்திரம் என இரண்டு விதமான நடிப்பையும் சரிசமமாக வழங்கியிருக்கிறார்.

வீட்டு ஓனரம்மாவாக நடித்துள்ள ஊர்வசி வழக்கம் போல படபட பட்டாசாக பொரிந்து தள்ளுகிறார். இடைவேளைக்கு பின் அவரது ஃப்ளாஷ்பேக் பற்றிய விஷயம் தெரிய வரும்போது நாம் மனது கனத்து விடுகிறது. அதேபோல கிளைமாக்ஸில் அந்த கண் தெரியாத வடநாட்டு பெரியவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் புதிய இணைப்பாக இருந்தாலும் கதைக்கு ஒரு முழுமையான நிறைவை தந்துள்ளது.

மொத்தத்தில் யானை முகத்தான் ஒரு மன நிறைவான படம் என்பதால் தாராளமாக தியேட்டர்களுக்கு செல்லலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments