கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விருமாண்டி, சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அபிராமி. குறிப்பாக விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஜோதிகா ரீஎண்ட்ரியான 36 வயதினிலே படத்தில் அவரது தோழியாக இவரும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனாலும் அதன்பிறகு திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கியவர், தற்போது ஒரு கோடை மர்டர் ஹிஸ்டரி என்கிற திரில்லர் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் மீண்டும் நடிப்பிற்கு மறுபிரவேசம் செய்துள்ளார்.
இது இவர் நடிக்கும் முதல் வெப் சீரிஸ் ஆகும். சில நேரங்களில் சில மனிதர்கள் என்கிற படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இந்த வெப்சீரிசை இயக்கியுள்ளார்.
ஜி5 நிறுவனம் இதை தயாரித்து உள்ளது. வரும் ஏப்ரல் 21ஆம் தேதி உலகம் எங்கும் இந்த வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை அபிராமி பேசும்போது, “இந்த மாதிரி பிரஸ் மீட் எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ZEE5 க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும். இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள்.
பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீன் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதேபோல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறினார்