விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி இருந்தார். இந்த படம் விஜய் ஆண்டனியின் திரையுலக வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தவுடன் அவரது வியாபார மார்க்கெட்டையும் விரிவுபடுத்தியது.

இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே நடித்து இயக்கியும் உள்ளார். முதல் பாகம் வெற்றி என்பதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது .ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் எழுந்தன.
குறிப்பாக மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பாளரான ராஜ கணபதி என்பவர் ஏற்கனவே 2016-ல் தாங்கள் தயாரித்து வெளியிட்ட பாண்டியராஜன் நடித்த ஆய்வுக்கூடம் என்கிற படத்தின் கதையை தான் தற்போது பிச்சைக்காரன்-2 என்கிற பெயரில் படமாக்கி உள்ளதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது பிச்சைக்காரன் 2 தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் இந்த படம் இந்த மாதம், அதிலும் இந்த வாரம் வெளியாகவில்லை, மே மாதம் தான் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம் அதனால் படத்திற்கு தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விசாரணை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.