Home News Kollywood தெலுங்கில் படம் இயக்குவது எப்போது ? யாருடன் ? ; வெற்றிமாறன் புது தகவல்

தெலுங்கில் படம் இயக்குவது எப்போது ? யாருடன் ? ; வெற்றிமாறன் புது தகவல்

இயக்குனர் வெற்றிமாறன் சந்தேகமேயில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராக உருவெடுத்துள்ளார். நடிகர்களைப் போலவே வெற்றிமாறனுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். எனவே வெற்றிமாறன் டைரக்சன் என்பதற்காகவே படம் பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் அவரது டைரக்சனில் நடிக்கும் வாய்ப்பு இங்கே முன்னணி நடிகர்களுக்கு கூட கிடைக்காத நிலையில் நகைச்சுவை நடிகரான சூரியை அழைத்து வந்து கதையின் நாயகனாக்கி விடுதலை என்கிற படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கிலும் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வழியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசும்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது விரைவில் அது நடக்கும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மகேஷ்பாபு ஆகியோருடன் பல கதைகள் குறித்து விவாதித்ததாகவும் ஆனால் அவை எதுவும் அவர்களுக்கு செட்டாகவில்லை என்றும் கூறிய வெற்றிமாறன், ஹீரோக்களுக்காக தான் எப்போதுமே கதை எழுதுவது இல்லை என்றும் தான் எழுதும் கதைகளில் தேவைப்படும் ஹீரோக்களை அழைத்து நடிக்க வைப்பது தான் வழக்கம் என்றும் அப்படி தான் உருவாக்கி உள்ள ஒரு கதையில் ஜூனியர் என் டி ஆர் தான் பொருத்தமாக இருப்பதாகவும் நிச்சயமாக அவரை வைத்து படம் இயக்குவேன் என்றும் கூறினார்.

அதே சமயம் அது உடனடியாக இல்லை என்றாலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் என்றும் அவர் கூறினார். விடுதலை படத்தை தொடர்ந்து அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.