இயக்குனர் பாலா கடந்த வருடம் நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து தற்போது அருண்விஜய் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

1999ல் சேது படம் மூலம் இயக்குனராக பாலா அடியெடுத்து வைத்தாலும் தொடர்ந்து இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருடனேயே பயணித்ததால் அவரது படங்களில் வைரமுத்துவின் பாடல்களை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. அதை தொடர்ந்து 2013-ல் வெளியான பரதேசி படத்தில் தான் ஜி.வி பிரகாஷின் இசையில் வைரமுத்துவுடன் முதன்முறையாக கூட்டணி சேர்ந்தார் பாலா.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய வர்மா படத்திலும் ஒரு பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்தநிலையில் தற்போது ஜி.வி பிரகாஷின் இசையில் வணங்கான் படத்திற்கும் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் பாலாவிற்கு உத்வேகம் தரும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் வைரமுத்து

அதில் அவர் கூறும் போது, “ பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய்.. உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் கைவிடாது கலை.. ஐந்து பாட்டிலும் ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்.. தீராத கங்குகளால் பழுத்துக்கிடக்கிறது என் பட்டறை.. தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன் போய் வா!” என்று கூறியுள்ளார்.