தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற பரம்பரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை பூர்ணா. நடிகர் விஜய்யால் அப்போது குட்டி அசின் என பாராட்டப்பட்ட இவர் தமிழிலும் இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்கிற தனது நிஜப்பெயரிலும் மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் சவரக்கத்தி, அருள்நிதியுடன் தகராறு மற்றும் சசிகுமார் நடித்த கொடிவீரன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் துபாயில் வசிக்கும் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார் பூர்ணா. கடந்த டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தவுடன் தனக்கு சொந்தமான யூட்யூப் சேனலில் தனது வளைகாப்பு வீடியோவையும் ஒளிபரப்பினார் பூர்ணா.

இந்த நிலையில் பிரசவத்திற்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பூர்ணா அழகான ஆண் குழந்தை ஒன்று பெற்றெடுத்துள்ளார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய பூர்ணா, கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்த தப்பித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவழியாக மீண்டு வந்தவர் கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகம் இவருக்கு வழங்கிய கோல்டன் விசாவை பெறுவதற்காக சென்றபோது அங்கு பழக்கமான ஷானித் ஆசிப் அலியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது