கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மப்டி திரைப்படத்தை தமிழில் சிம்பு, கௌதம் கார்த்திக் கூட்டணியில் ‘பத்து தல’யாக மாற்றி உள்ளார்கள். இந்த பத்து தல ராவண அவதாரமா ? தசாவதாரமா ? பார்க்கலாம்
தமிழ்நாட்டை யார் ஆளலாம் என கன்னியாகுமரியில் இருக்கும் மிகப்பெரிய தாதாவான சிம்பு முடிவு செய்கிறார். அவரது தங்கையின் சகோதரர் முதல்வராக இருக்கும் நிலையில் திடீரென ஒரு நாள் இரவில் காணாமல் போகிறார். அதன்பிறகு சிம்புவின் ஆதரவிலேயே இன்னொருவர் முதல்வராக அமர, சில எம்எல்ஏக்களை தன் கைவசம் வைத்திருக்கும் கௌதம் மேனன் அவரை நீக்கிவிட்டு தான் முதல்வராக துடிக்கிறார்.
இந்த நிலையில் முதல்வர் காணாமல் போனதன் பின்னியில் யார் இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதற்காக களம் இறக்கி விடப்படுகிறார் அன்டர்கவர் ஆபீசரரான கௌதம் கார்த்திக். சிம்புவின் மீதுதான் சந்தேகம் என்பதால் அவரது ஏரியாவுக்குள்ளேயே நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம்பிக்கையை பெறும் கௌதம் கார்த்திக்கிற்கு குற்றவாளி யார் என தெரிந்து, மேலிடத்திற்கு அவர் ரிப்போர்ட் பண்ணும் நேரத்தில் எதிர்பாராத சில நிகழ்வுகள் நடக்கின்றன.
முதல்வர் காணாமல் போனது ஏன் ? அவருக்கு என்ன ஆனது ? இதன் உண்மையான பின்னணி என்ன ? உண்மையிலேயே சிம்பு நல்லவரா, கெட்டவரா என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
தமிழ் சினிமாவில் குறைந்தபட்சம் ஒரு ஹீரோவின் என்ட்ரி படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் வந்து விடும். ஆனால் கிட்டத்தட்ட இடைவேளை விடும் சமயத்தில் தான் என்ட்ரி கொடுக்கிறார் சிம்பு. அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தான் என்றாலும், இடைவேளைக்கு பின்பு அந்த குறையை தனது மாஸ் கலந்த நடிப்பால் ஈடு கட்டி விடுகிறார் சிம்பு. குறிப்பாக கருப்பு சட்டை, கருப்பு வேட்டி, நரைத்த தாடி என தோற்றம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஏஜிஆர் என்கிற இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவே பொருந்தியுள்ளார் சிம்பு. அவருடைய பரபரப்பான பஞ்ச் வசனங்கள் இதில் குறைவு தான் என்றாலும் பேசும் வசனங்கள் எல்லாம் ஆணித்தரமாகவே இருக்கின்றன. அதேபோல கௌதம் கார்த்திக்கிற்கு நிறைய காட்சிகளை விட்டுக்கொடுத்து அவரை இன்னும் ஒரு படி மேலே ஏற்றி விட முயற்சியும் செய்திருக்கும் சிம்புவை தாராளமாக பாராட்ட வேண்டும்.
கௌதம் கார்த்திக் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இதில் இன்னும் நடிப்பதற்கும் ஸ்கோர் செய்வதற்கும் அதிக வாய்ப்பை பெற்றுள்ளார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியும் உள்ளார். அண்டர்கவர் ஆபீஸர் என்பதற்கு ஏற்ப அவர் சிம்புவின் கோட்டைக்குள் நுழையும் காட்சிகள் திக் திக் ரகம்.
கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் தாசில்தார், அடுத்து அரசியலில் போட்டி என ஒரு பக்கம் அதிரடி காட்டுவதுடன் காதல் இருந்தாலும் காதலைப் பற்றியே நினைக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
கதாநாயகியை விட அதிக காட்சிகளில் சிம்புவின் தங்கையாக வரும் மலையாள நடிகை அனு சித்தாராவுக்கு வசனங்கள் குறைவாக இருந்தாலும் நடிப்பில் நிறைவாக செய்திருக்கிறார். அவருக்கு இனி தமிழில் அதிக வாய்ப்புகள் வரலாம்.
அரசியல் வில்லன்களாக சந்தோஷ் பிரதாப், கௌதம் மேனன் ஆகியோர் சரியான தேர்வு தான். சிம்புவின் நண்பராக கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் கெத்து காட்டி இருக்கிறார் கலையரசன். படத்தில் சிம்புவுக்கு நண்பர்களாகவும் துரோகிகளாகவும் நடித்துள்ள நட்சத்திர பட்டாளமும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக பிஸ்டல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலியபெருமாள் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசை தான் என்றாலும் பாடல்கலால் பெரிய அளவில் அவர் கவனம் ஈர்க்க தவறி இருக்கிறார். அதேசமயம் பின்னனி இசையில் அதற்கு ஈடு கட்டி விறுவிறுப்பு ஏற்றி இருக்கிறார்.
ஒரு மாஸ் கமர்சியல் படத்திற்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இருந்தாலும் அவற்றை ஒரு சரியாக இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா கோர்க்க தவறி உள்ளாரோ என்கிற எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக கௌதம் மேனன் முதல்வர் பதவியை பிடிப்பதற்காக அரசியல் காய்கள் நகர்த்துவது தலையைச் சுற்றி மூக்கை தொடுவது போன்று சுற்றி வளைக்காமல் இன்னும் கொஞ்சம் கிரிப்பாக காட்டி இருக்கலாம்.
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதிரடி தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கிளைமாக்ஸில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் பேசும் காட்சியை பார்க்கும்போது ஒரே நேரத்தில் நந்தாவும் தளபதியும் நம் நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி சிம்பு ரசிகர்களுக்கு ஏற்ற செமத்தியான தீனியை இந்தப் பத்து தல கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.