சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் மப்டி என்கிற பெயரில் வெளியான இந்த படம் தான் தமிழில் பத்து தல என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. அதேசமயம் இந்த படம் தமிழுக்கு ஏற்றபடி பல விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டு கன்னட படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு உருவாகியுள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 30 வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி நடிகரும் இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த டி.ராஜேந்தர் சிம்புவுக்கும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.