கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வெளியான படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தின் நேர்த்தியான உருவாக்கம், கிட்டத்தட்ட 1000 கோடி வசூலிக்கும் அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது.
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்து இருந்தார். இந்தியாவின் பல திசைகளில் இருந்தும் ஆர் ஆர் ஆர் படக்குழுவதற்கு வாழ்த்துக்கள் நேரிலும் சோசியல் மீடியாவிலும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் நடிகை குஷ்பூ சமீபத்தில் நடிகர் ராம்சரனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றிருந்தார்.
அப்போது அங்கே ராஜமவுலி இல்லத்திற்கு நேரில் சென்று அவரையும் இசையமைப்பாளர் மரகதமணியையும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல அங்கே அருமையான விருந்தையும் ஒரு கை பார்த்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.
அது மட்டுமல்ல ராஜமவுலி, மரகதமணி, அவர்களது இல்லத்தரசிகள் யாருமே இந்த வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை என்றும் எப்போதும் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் வியந்து பாராட்டியுள்ளார் குஷ்பூ.