கடந்த 2012ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான படம் பீட்சா. கார்த்திக் சுப்புராஜின் அறிமுக படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் கார்த்திக் சுப்புராஜை முன்னணி இயக்குனராக உயர்த்தியது. விஜய்சேதுபதிக்கு கமர்சியல் மார்க்கெட்டையும் பெற்று தந்தது.
இதை தொடர்ந்து அடுத்த வருடமே இதன் இரண்டாம் பாகமாக பீட்சா 2 வில்லா என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படத்தை தீபன் சக்கரவர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, சஞ்சிதா செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூன்றாம் பாகம் பீட்சா 3 மம்மி என்கிற பெயரில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் அஸ்வின் காக்குமானு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் என்பவர் இயக்கியுள்ளார்.
பீட்சா படத்தை தயாரித்த சிவி குமார் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் மே 12ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.