சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ள படம் பத்து தல. ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சிம்பு பேசும்போது, “இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் கௌதம் கார்த்திக் தான். இந்த படத்தில் எனக்கு கிடைக்கும் வெற்றியை விட கௌதம் கார்த்திக்குக்கு கிடைக்கப் போகும் வெற்றியைத் தான் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இடையில் சில காரணங்களால் இந்த படத்தை விட்டு விலகி விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் தம்பி கௌதமுக்காக அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு இந்த படத்தில் தொடர்ந்து நடித்தேன். நிச்சயமாக இந்த படத்தின் மூலம் கௌதம் கார்த்திக் அடுத்த இடத்திற்கு செல்வார்.
இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை.. படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எனக்கு ஜோடி இல்லை.. இதுநாள் வரை நான் பல இடங்களில் கத்தி பேசியிருக்கிறேன். ரசிகர்கள் கூட முன்பெல்லாம் நீங்கள் எனர்ஜிடிக்காக பேசுவீர்கள், இப்போது உங்கள் பேச்சில் அது இல்லையே என்று கூறுவார்கள்..
உண்மைதான் முன்பு நான் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன்.. அப்போது எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை.. அதனால் அப்படி கத்தி பேசி எனக்கு நானே தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டேன்..
ஆனால் தற்போது மாநாடு படத்தின் வெற்றிம், வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்பு, இதோ இப்போது பத்து தல என என்னை இந்த இடத்தில் நீங்கள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்.. அதனால் நான் இனி எப்படி கத்தி பேச முடியும்.. பணிவாகத்தான் பேசுவேன்.. ரசிகர்களும் தமிழ் சினிமாவும் தலைகுனியும் விதமாக நான் நடிக்க மாட்டேன்” என்று கூறினார்.