எண்பதுகளின் மத்தியில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதி வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. பெரும்பாலான படங்களில் கவுண்டமணி, செந்தில் இருவரும் அப்போது இணைந்து நடித்து வந்தாலும் செந்திலின் திறமையையும் அவரது மார்க்கெட்டையும் உயர்த்தும் விதமாக வேலைக்காரன், மனிதன், தர்மதுரை, வீரா, அருணாச்சலம், படையப்பா என அனைத்து படங்களிலும் தனது நண்பராக செந்திலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்த்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
படையப்பா படத்திற்கு பிறகு செந்திலும் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் இருந்தும், நடிப்பிலிருந்து ஒதுங்கி கொண்டார். இந்த நிலையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செந்தில் இணைந்து நடிக்க இருக்கிறார் என்கிற மகிழ்ச்சியான செய்தி தற்போது மீடியாக்களில் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் என்கிற படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் செந்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது செஞ்சி அருகில் உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து செந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லால் சலாம் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.