கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரை உலகில் ரசிகர்களை சிரிக்க வைப்பது ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு சினிமாவில் நடித்து வந்தவர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றவர் மயில்சாமி.

ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் இவ் உலகை விட்டு பிரிந்தார் மயில்சாமி. கடந்த இரண்டு வருட காலகட்டத்தில் திரைகளில் இருந்து பல நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மறைந்தாலும் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட விவேக் மற்றும் நடிகர் மயில்சாமி ஆகியோரின் மறைவு சினிமாவை மட்டுமல்ல, பொதுமக்களையும் கூட வெகுவாக பாதித்தது. அந்த அளவிற்கு அவர்கள் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.

இந்த நிலையில் மயில்சாமி மறைந்த பிறகு அவர் ஏற்கனவே நடித்திருந்த கோஸ்டி திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக, முக்கிய வேடத்தில் நடிக்க யோகி பாபு நடித்துள்ளார்.

அது மட்டுமல்ல ஊர்வசி, ரெடின் கிங்ஸ்லி, சத்யன், ஜெகன் என ஒரு நகைச்சுவை பட்டாளமே இவர்களுடன் இணைந்து நடித்துள்ளது. இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை பார்ப்பதன் மூலம் மீண்டும் மயில்சாமியை நேரில் பார்த்த உணர்வு நிச்சயமாக கிடைக்கும் என நம்பலாம்.