கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது. முதன்முறையாக இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நேரடியாகவே தனுஷ் அடியெடுத்து வைத்துள்ளார். அதேசமயம் தெலுங்கு தமிழ் என ஒரே நேரத்தில் இருமொழி படமாக உருவான இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
கதாநாயகியாக சம்யுக்தா நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் வா வாத்தி என்கிற பெயரில் இடம்பெற்ற அடி ஆத்தி இது என்ன ஃபீலு என்கிற லிரிக் பாடல் வீடியோ வெளியாகி பட்டிதொட்டி எங்கும் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாக மாறியது.
குறிப்பாக இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த பாடலை தனுஷே எழுதியிருந்தார் என்பது ஹைலைட்டான ஒன்று. ஸ்வேதா மோகன் இந்த பாடலுக்கு தனது காந்தக்குரலால் அற்புதமாக உயிர் கொடுத்திருந்தார்.
இப்போது வரை அந்த லிரிக் பாடல் வீடியோ 63 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. படத்தில் அந்த பாடல் வெளியான போது தியேட்டரே அதிர்ந்தது.
இந்தப்படம் வெளியாகி தற்போது 25 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வா வாத்தி பாடலின் முழு வீடியோவும் இன்று வெளியாகி உள்ளது. லிரிக் பாடல் வீடியோ போலவே இந்தப் பாடலை தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.