தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் ஆளுமை நிறைந்த காலம் ஒன்று இருந்தது. எப்போதும் அவர் மாமேதை தான் என்றாலும் 90களின் துவக்கத்தில் ரொம்பவே பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த இளையராஜாவை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கால அவகாசம் கிடைக்கவில்லை.
அதற்கு மாற்றாக ஒருவரை உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் முடிவு செய்தார். அந்த சமயத்தில் தான் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்த மரகதமணியை அழைத்து வந்து தான் இயக்கிய அழகன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து அவருக்கு வானமே எல்லை, ஜாதிமல்லி என தான் இயக்கிய படங்களில் வாய்ப்பு கொடுத்தார், மரகதமனியும் கொடுத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி சிறப்பான பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதற்கு அடுத்ததாக இன்னொரு இசையமைப்பாளரை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஏ ஆர் ரகுமானை தன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர். அவர்கள் இருவரின் பெயர் சொல்லுமாறு ஏ ஆர் ரகுமான் இன்று வரை இசையில் உலக புகழ் பெற்று கோலோச்சி வருகிறார்.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்லம் டார்க் மில்லியனர் என்கிற படத்திற்கு இசையமைத்ததன் மூலமாக ஆஸ்கார் விருதையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் ஏ ஆர் ரகுமான்.

இந்த நிலையில் தற்போது ராஜமலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர் ஆர் படத்தில் மரகதமணி இசையமைத்த நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

இப்படி தமிழில் பாலச்சந்தரால் அறிமுகமான இந்த இருவருமே உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்று அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்.