சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் அவரது 168வது படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனையடுத்து அவர் நடிக்க உள்ள அவரது 170வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என கடந்த சில மாதமாகவே சோசியல் மீடியாவில் யூகங்களாக பல செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன. அதில் ஒன்றாகத்தான் ஜெய்பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டு படத்தை தயாரிக்க இருக்கும் லைக்கா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் உள்ளது.

இன்று லைக்கா புரொடக்சன் சேர்மன் சுபாஸ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த ‘தலைவர் 170’ படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 மற்றும் தர்பார் அடுத்து அவர் நடிக்க இருக்கும் லால் சலாம் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் அவருடன் லைக்கா நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்ட, தர்பார் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் ஆகிய படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.