சமீப வருடங்களாக ஒவ்வொரு மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தென்னிந்திய மொழிகளையும் தாண்டி இந்தியிலும் வெளியாகும் விதமாக பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அதே சமயம் சிலர் பாலிவுட்டை விரும்பாமல் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே தங்களது படங்களை ரிலீஸ் செய்யும் விதமாக உருவாக்கி வருகின்றனர்.
அப்படி தென்னிந்திய மொழிகள் நான்கிலும் வெளியாகும் விதமாக உருவாகும் படம் தான் செவ்வாய்க்கிழமை. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர் எக்ஸ் 100 என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் பூபதி தான் இந்த படத்தை இயக்குகிறார், இந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.
காந்தாரா படத்தின் மூலம் இசையில் திரும்பி பார்க்க வைத்த இசையமைப்பாளர் அஜ்னீஸ் லோக்நாத் தான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
அதே சமயம் இந்த படத்தில் இந்த நான்கு மொழிகளில் இருந்தும் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை பற்றி இயக்குனர் அஜய் பூபதி கூறும்போது, “செவ்வாய்க்கிழமை என்கிற கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை செய்யப்படாத ஒரு புதிய முயற்சி இது. இந்த படத்தை பார்க்கும்போது தான் எதற்காக இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதன் நியாயம் புரியும். மொத்தம் இந்த படத்தில் 30 கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.