கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்று தந்ததுடன், அவரது வியாபார எல்லையையும் விரிவு படுத்தியது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சசி சில காரணங்களால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்க முடியாமல் ஒதுங்கிக் கொள்ள, விஜய் ஆண்டனியே இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட விஜய் ஆண்டனி இந்த படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று தற்போது ஓரளவு குணமாகி உள்ளார். இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் விஜய் ஆண்டனி ஏற்கனவே கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. கோடை விடுமுறை துவங்கும் சமயத்தில் இந்த படம் வெளியாவதால் அனைவரும் குடும்பத்தினருடன் வந்து படம் பார்ப்பதற்கு தோதாக இந்த ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.