தமிழில் விருதுகள் பல பெற்ற டூ லெட், மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பேட்டைக்காளி என்கிற வெப் சீரிஸில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார்.
இந்தத் தொடரில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் துணிச்சல் மிகுந்த கிராமத்து பெண்ணாக அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தானே சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து சில தினங்களுக்கு முன்பு அதை வாடிவாசலில் களம் இறக்கி உள்ளார்.
இந்த தகவலை சமீபத்தில் நடைபெற்ற குடி மகான் என்கிற படத்தில் இசை வெளியீட்டு விழாவின்போது பகிர்ந்து கொண்டார் ஷீலா ராஜ்குமார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசும்போது “நான் நடித்த பேட்டக்காளி வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்த்தவர்கள் அனைவரும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்து ஏற்றுக்கொண்டதை நான் மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். அதில் பேட்டக்காளி என்கிற ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நானே வளர்த்த என்னுடைய மாட்டை வாடிவாசலில் இறக்கினேன். அந்த மாட்டின் பெயர் பாஷா.
இந்த குடிமகன் படத்தில் நானும் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பேட்டக்காளி வெப் தொடருக்கு மொத்தமாக என்னுடைய கால்ஷீட்டை கொடுத்து விட்டதால் இதில் என்னால் நடிக்க முடியாமல் போனது,. அதற்காக இந்த இடத்தில் இயக்குனர் பிரகாஷிடம் எனது வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.
பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.