தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ரித்திகா சிங். நிஜமான குத்துச்சண்டை வீரரான இவர் அதைத்தொடர்ந்து சண்டைக்களத்தை விட்டுவிட்டு திரை உலகிலேயே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் இன் கார். இந்தி மொழியில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தை தமிழில் ஸ்டூடியோ ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். மார்ச் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாகிறது
இந்தப்படத்தை ஹர்ஷவர்தன் என்பவர் இயகியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங் இந்தப் படம் பற்றியும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசினார்
அவர் கூறும்போது “இன் கார்” படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. என்றார்.