எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் தர்மத்தின் தலைவன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. அதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக இணைந்து நடித்து, வெற்றி படங்களை கொடுத்த நடிகை குஷ்பூவுக்கு கோவில் கட்டும் அளவிற்கு அவரது புகழ் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நடிகை குஷ்பூ இன்னொரு பக்கம் அரசியலிலும் நுழைந்தார். அந்த வகையில் தற்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் குஷ்பூ. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் குஷ்பூவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய பொறுப்பு குறித்து நடிகை குஷ்பூ கூறும்போது, “பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து நான் போராடுவேன். பெண்களுக்கு சமூகத்தில் நல்லதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.