கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அவர் அடுத்ததாக சசிகுமாருடன் இணைந்து நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் அஜித்தின் தங்கையாக வேதாளம் திரைப்படத்தில் நடித்த லட்சுமி மேனன், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது சப்தம் என்கிற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் லட்சுமிமேனன்.
ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். விறுவிறுப்பான படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் அறிவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஈரம் படத்தை தொடர்ந்து ஆதியும் அறிவழகனும் இணையும் இரண்டாவது படம் இது.

இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் இனிதே நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி லக்ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.