கடந்த சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்திய திரௌபதி என்கிற படத்தை இயக்கியவர் மோகன் ஜி. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படமும் படம் வெளியாவதற்கு முன்பிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தது. காரணம் சாதியை மையப்படுத்தி இவரது படம் உருவாகி இருந்ததால் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக மட்டுமே படங்களை எடுத்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விதமாக இவருக்கு நேர் மாறாக இயக்குனர் பா ரஞ்சித் தனது படங்களை தயாரித்து வருகிறார் என்றும் இதனால் இவர்கள் இருவருக்கும் உரசல் என்பது போன்றும் ஒரு கருத்தும் நிலவி வந்தது.

இந்த நிலையில் செல்வராகவன், நட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள பகாசுரன் படத்தை இயக்கியுள்ள மோகன் ஜி அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்த படம் அனைவருக்குமான படம் எந்த ஒரு சமூகத்தையும் எதிர்த்து பணம் செய்வதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. அதேபோல நானும் பா ரஞ்சித்தும் குறிப்பிட்ட சமூகத்தினரை மையப்படுத்தி படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் படங்களை நான் ட்விட்டரில் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். நானும் அவரும் நண்பர்கள்.

சினிமாவில் நான் யாரையும் எதிரியாகவும் பார்க்கவில்லை. சினிமாவில் சமநிலை வேண்டும் இனிவரும் படங்களில் என் பொறுப்புணர்வு அதிகரிக்கும் சமூக மாற்றத்தை கொண்டு வரும் படங்களை இயக்குவேன். சாதி இருக்கிறது என நான் சொல்லும்போது திட்டினார்கள். வெற்றிமாறன் சொல்லும்போது பாராட்டுகிறார்கள்.. யார் சொல்வது என்பதுதான் இங்கே முக்கியம்.
இயக்குனர் செல்வராகவனை பார்த்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன். தினமும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் படப்பிடிப்பை துவக்குவேன் என்று கூறியுள்ளார் மோகன்ஜி.