யாரடி நீ மோகினி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறியெடுத்து வைத்தவர் இயக்குனர் மித்ரன் ஜவகர். தொடர்ந்து தனுஷை வைத்து குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய இவர் கடந்த வருடம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும் மீண்டும் தனுஷை வைத்து இயக்கி கடந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக கொடுத்தார்.
ஒரு இளைஞனின் மூன்று பருவத்திலான காதல் கதையை அழகாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்த மித்ரன் ஜவஹர் அடுத்ததாக தற்போது அறிமுக நடிகரான இசான் என்பவரை கதாநாயகனாக வைத்து அரியவன் என்கிற படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். கதாநாயகியாக பிரனாலி போகரே என்பவர் நடிக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமூகத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகி வருகிறது .