தமிழ் சினிமாவில் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறாரோ அதேபோல மலையாளத்தில் 40 வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். இவர்கள் இருவருமே பல வருடங்களாக நண்பர்களாக இருந்தாலும் பொதுவெளிகளில் சந்தித்துக் கொண்டது ரொம்பவே குறைவான தருணங்கள் தான்.
எண்பதுகளின் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து வருடம் தோறும் நடத்தும் நிகழ்வில் ஒருமுறை இருவரும் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற ஸ்டண்ட் யூனியன் கலைஞர்களின் விழா நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
பின்னர் காப்பான் படத்தில் மோகன்லால் நடித்தபோது அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் மோகன்லாலும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பிலும் மோகன்லால் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த இருவரின் கூட்டணியில் இந்த படம் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் இன்னும் அதிகமாய் இருக்கிறது. அதனால் படத்தின் ரிலீஸ் எப்போது என்கிற ஆர்வமும் அவர்களிடம் இரட்டிப்பாகியுள்ளது என்பதை சோசியல் மீடியாவில் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மூலம் பார்க்க முடிகிறது.