இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கடந்த 40 வருடங்களாக திரையுலகில் இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். அவருக்கு 83 வயது ஆகும் நிலையில் கூட தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.
அதைவிட ஆச்சரியமாக தற்போது நான் கடவுள் இல்லை என்கிற படத்தை இயக்கியுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். இந்த படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க, சாக்சி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். கொடூரமான வில்லனாக நடித்துள்ளார் பருத்திவீரன் சரவணன். எஸ் ஏ சந்திரசேகரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் படத்தில் அவர் தான் கடவுள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்பது படம் பார்த்தால் தான் தெரியும்.
இதற்கு முன் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படத்தில் கடவுள் ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் வர மாட்டார் சில இடங்களுக்கு மனிதனை அனுப்பி வைப்பார் என்று ரஜினிகாந்த் ஒரு வசனம் பேசி இருப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அந்த ட்ரைலரின் இறுதி சில நொடிகளில் இந்த காட்சியை இணைத்துள்ளார் எஸ்.ஏ.ஸி.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினிகாந்த் பேசும் வசனத்திற்கும் இந்த படத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சொல்லப்போனால் இந்த படத்தின் கதை கூட அந்த நூலிழையை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.