மாஸ்டர் என்கிற பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கும் படம் தளபதி 67 என்கிற தற்காலிக டைட்டிலில் உருவாகி வருகிறது. அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தை எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக சொல்லப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் இணைந்திருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல நடிகை பிரியா ஆனந்தும் இந்த படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்ததும் தற்போது உறுதியாகி உள்ளது.
மேலும் 90களில் ஆக்சன் கிங்காக வலம் வந்த நடிகர் அர்ஜுன் சமீப காலமாக குணச்சித்திரா மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த தளபதி 67 படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.
அது மட்டுமல்ல பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
மேலும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராக இணைந்து நடிக்கிறார்.
ஏற்கனவே விக்ரம் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பாடிய பாடல் ஒன்று அடிக்கடி அந்த படத்தில் ஒலித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதனால் விஜய் படத்தில் எப்படியும் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் லோகேஷ் கனகராஜ் கொடுத்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக மன்சூர் அலிகானுக்கும் இந்த படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான மேத்யூ தாமஸ் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார்.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனனுடன் இணைந்து இதே மேத்யூ தாமஸ் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.