இன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் யூ டியூப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் நடத்தி வரும் பரிதாபங்கள் என்கிற சேனலில் தொடர்ந்து இவர்கள் வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது வெள்ளித்திரைகள் கதாநாயகர்களாக களம் இறங்கியுள்ளனர் கமர்சியல் ஃபேமிலி பேண்டஸி கலந்து பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது.
படம் குறித்து கோபி – சுதாகர் கூறியதாவது.. இந்தகதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் தான் படத்திலும் இருக்கும் ஆனால் அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பொழுது போக்கும் இப்படத்தில் இருக்கும். யுடூயூப் வீடியோக்களில் சிரிக்க வைப்பது வேறு வகையானது ஆனால் சினிமா எனும்போது ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும்.
பரிதாபங்களில் இருக்கும் கோபி சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். ஆனால் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும் என்றனர். இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் VTV கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, Mu.ராமசாமி, முருகானந்தம், பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், டிராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் சென்னையை சுற்றி 40 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பொது நிதியிலிருந்து இப்படம் உருவாக்கப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.