திரைப்பட பாடல்கள் குறிப்பாக வீடியோவாக வெளி வருவதற்கு முன்பே லிரிக் பாடல் வீடியோவாக வெளியாகும் பாடல்களுக்கு கூட ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அந்த வகையில் விஜய்யின் பாடல்கள் தான் எப்போதுமே சாதனை செய்வதில் முதல் இடத்தில் இருக்கின்றன.
கடந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளில் உருவான ஹலமத்தி ஹபிபோ என்கிற பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.
கூடவே ஜானி மாஸ்டரின் நடனமும் சேர்ந்து கொள்ள அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இப்போதுவரை 500 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை செய்தது.
இந்த நிலையில் பொங்கல் வெளியீடாக வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே லிரிக் பாடல் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. தற்போது இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கிட்டத்தட்ட 150 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற மிகப்பெரிய சாதனையை தொட்டுள்ளது இந்த பாடல்.
பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலுக்கு தமன் இசையும் ஜானி மாஸ்டர் நடன வடிவமைப்பில் விஜய் ஆடிய துள்ளலான நடனமும் சேர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இந்த பாடலுக்கு பெற்று தந்தது.
இதற்கிடையே விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 416 மில்லியனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.