90களின் மத்தியில் நாட்டாமை, படையப்பா, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இதைத்தொடர்ந்து வளர்ந்து வாலிபராகிவிட்ட அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திளும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் இளம் பருவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். கொஞ்ச நேரமே வந்து சென்றாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவருடம் வழங்கும் சந்தோஷம் விருது விழாவில், மாஸ்டர் படத்திற்காக துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் மகேந்திரன். இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது…
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம், வளர்ந்து வரும் இளம் நடிகரான எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது. இந்த வாய்ப்பை அளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கும், லோகேஷ் அண்ணாவுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தக் கதாப்பத்திரம் ரசிகர்களின் மனங்களை வென்றது, இப்போது உயரிய விருதுகளை வெல்வது இன்னும் மகிழ்ச்சி தருகிறது. இந்தக்கதாப்பாத்திரத்தை செய்வதற்கு விஜய் சேதுபதி அண்ணா பெரும் ஆதரவாக இருந்தார். அவரது பிறந்த நாளில் விருது வென்ற இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தற்போது நீலகண்டா, அர்த்தம், அமிகோ கராஜ், ரிப்பப்பரி, இயல்வது கரவேல் முதலான படங்களில் நடித்து வருகிறார்.