தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப்படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.
தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்
நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷ் பேசும்போது, “தெலுங்கு இயக்குனர் என சொல்கிறார்களே என இயக்குனர் வம்சி வருத்தப்பட வேண்டாம். தமிழ் ரசிகர்கள் உங்களை தங்களில் ஒருவனாக பார்க்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முகத்தில் எந்நேரமும் குடியிருக்கும் இந்த சிரிப்பை பார்க்கும்போது நாலாபக்கமும் இருந்து வசூல் கொட்டுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. தற்போது மலையாளத்தில் திலீப், தமன்னா நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்தேன்..
அங்கே விஜய் ரசிகர் ஒருவர் தனது கையிலும் முதுகுப்பக்கத்திலும் விஜய்யின் உருவத்தை பிரமாண்டமாக பச்சை குத்தி வைத்திருந்ததை பார்த்து பிரமித்து போனேன். அந்த அளவிற்கு கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.. பத்து வருடங்களுக்கு முன்பு தமனுடன் கிரிக்கெட் விளையாடிய சமயத்தில் அவர் குண்டாக இருப்பதால் இந்த பையன் வேண்டாம் என்று கூறினேன்.. ஆனால் அடுத்தடுத்து அவர் அடித்த சிக்ஸர்களை கண்டதும், உருவத்தை பார்த்து ஆளை எடை போடக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த படத்தில் தமன் அந்த அளவிற்கு துள்ளலான இசையை கொடுத்து ஆட வைத்துள்ளார்” என்றார்.