பொதுவாக சினிமா துவக்க விழாக்கள் சென்னையில் தான் நடக்கும். சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே அல்லது படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலேயே பூஜை போடுவது வழக்கம். ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக சபரிமலையில் ஒரு தமிழ் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.
படத்தின் பெயரும் சன்னிதானம் PO என்பதுதான். சபரிமலை, அங்கே உள்ள ஒரு போஸ்ட் ஆபீஸ், அங்கே பக்தர்களை தூக்கிச் செல்வதற்காக பணி புரியும் டோலி பணியாளர்கள் இவர்களை மையப்படுத்தி இந்த படம் உருவாவதால் சபரிமலையில் வைத்து அதுவும் மகர விளக்கு ஜோதி நாளில் இதன் துவக்க விழா நடைபெற்றுள்ளது.
இந்த துவக்க விழாவில் முதல் கிளாப் அடித்து துவங்கி வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் இந்த நிகழ்வில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார்
சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.