மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த மஞ்சு வாரியருக்கு அப்போது தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் தயக்கம் காரணமாக மலையாள திரை உலகிலேயே நின்று விட்டார். அதன்பிறகு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு ஹவ் ஓல்ட் ஆர் யூ என்கிற படத்தின் மூலம் மீண்டும் வெற்றிகரமாக கதாநாயகியாக ரீஎண்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர். இப்போதுவரை அவரது வேகம் குறையாமல் முன்னணி குதிரையாகவே ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த முதல் படத்திலேயே அவரது நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இங்கேயும் ஒரு இடத்தை பிடித்தார்.
அதை தொடர்ந்து தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் துணிவு படத்திலும் அஜித் உடன் இணைந்து நடித்துள்ளார் மஞ்சு வாரியர். இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து தமிழ் சினிமாவிலும் இவர் ராசியான நடிகை என்கிற ஒரு வெற்றிகரமான தோற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் போது முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை.
இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.
இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரம், வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகை மஞ்சு வாரியார் தன் உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதால் இதனை பகிர்ந்து கொள்ள நாயகன் அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் பட குழுவினர் மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்
ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். அதே நாளில் அவரது நடிப்பில் தயாரான ‘ஆயிஷா’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் ‘துணிவு: திரைப்படத்தின் கண்மணி எனும் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக ‘ஆயிஷா’ எனும் குணச்சித்திர வேடத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இதனிடையே பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், ஜனவரி மாதம் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் சூர்ய விழாவில் அவருடைய அண்மைய தயாரிப்பான ‘ராதே ஷ்யாம்’ எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.