மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். மூத்த மகன் ஸ்ரீகாந்த். அடுத்தவர் ஷாம்.. இளைய மகன் விஜய்.. முதல் இரண்டு மகன்களை தனக்கு உதவியாக பிசினஸை கவனித்துக் கொள்ளுமாறு தயார்படுத்தி விடுகிறார் சரத்குமார் ஆனால் இளைய மகனோ தனக்கு பிசினஸில் ஆர்வம் இல்லை என்றும் தனக்கு பிடித்தமான மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் துறையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்வேன் என்றும் கூற, அவர் மீது கோபப்பட்டதுடன் அவரை வீட்டை விட்டும் வெளியேற சொல்கிறார் சரத்குமார்.

ஏழு வருடம் கடந்த நிலையில் தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தினால் அதை சாக்காக வைத்து மகனை அழைக்க நினைக்கிறார் அம்மா ஜெயசுதா. மகனை வீட்டுக்கு வரவழைக்கும் மனைவியின் திட்டம் தெரிந்து முதலில் மறுத்தாலும் மறுநாளே அறுபதாம் கல்யாணத்தை நடத்த சம்மதம் தெரிவித்து மகனையும் வீட்டிற்கு வரச் சொல்லும் அளவிற்கு சரத்குமாரின் நிலைமை மாறுகிறது.
வீட்டிற்கு வரும் விஜய்யை இரண்டு சகோதரர்களும் மதிக்காததுடன் அண்ணன் மகள் கூட எடுத்தெறிந்து பேசுகிறார். தங்களது இடத்தை பிடிக்கத்தான் தம்பி வந்து விட்டானோ என அண்ணன்கள் இருவரும் அவருக்கு எதிராக திரும்ப அதன் காரணமாக எதிரிகளின் வலையில் சிக்கி தம்பிக்கு மட்டுமல்ல தந்தைக்கும் எதிராக மாறி தங்களது பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜுடன் கூட்டு சேர்கிறார்கள்.

அடுத்து என்ன..? பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்து குடும்பத்தை ஒன்று சேர்க்க களமிறங்குகிறார் விஜய். வீட்டை விட்டு வெளியே போகச்சொன்ன மகனை திரும்பவும் சரத்குமார் வரவழைக்கும் அளவிற்கு அவரிடம் என்ன திடீர் மாற்றம் ? விஜய்யால் அண்ணன்களின் பிரச்சனைகளை சமாளித்து குடும்பத்தை ஒன்று சேர்க்க முடிந்ததா என்பது மீதிக்கதை.
அடிதடி, ரவுடியிசம் கதைகளை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்து அழகான குடும்பப்பங்கான கதைக்குள் வந்திருக்கிறார் விஜய். பீஸ்ட் படத்தில் பார்த்ததை விட அவரிடம் இன்னும் அழகு கூடி இருப்பதை மறுப்பதற்கு இல்லை. மற்றபடி தனக்கு புகுந்த விளையாட கிடைத்த இடங்களில் எல்லாம் விளையாடி இருக்கிறார் விஜய். யோகிபாபுவுடன் இணைந்து காமெடியில் அண்டர்பிளே செய்து நடித்தும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா. குறைவான காட்சிகளில் வந்தாலும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல் காட்சிகள் மூலம் தனது இருப்பை ஈடுகட்டி இருக்கிறார்.

குடும்பத் தலைவனாக கம்பீரமான அந்த கதாபாத்திரத்தை அழகாக சுமந்து இருக்கிறார் சரத்குமார். மகனிடம் கண்டிப்பு, அதேசமயம் நெகிழ்வு என இரண்டு வித உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இரண்டு மகன்களாக ஸ்ரீகாந்த், ஷாம் இருவருக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு.. கிடைத்ததை சரியாக பயன்படுத்தி உள்ளார்கள் இருவரும்.. நீண்ட நாளைக்கு பிறகு சங்கீதா.. திருப்தி தரும் நடிப்பு..
வம்சி படங்களில் தவறாமல் இடம்பெறும் பிரகாஷ்ராஜ், ஜெயசுதா என இருவருமே இதிலும் இருக்கிறார்கள்.. பாசமான அம்மாவாக வழக்கம்போல் பாஸ்மார்க் பெறுகிறார் ஜெயசுதா. பிரகாஷ்ராஜை தான் இன்னும் சற்று அதிகமாக பயன்படுத்தி இருக்கலாமோ, கொஞ்சம் புதிதான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாமோ என்கிற எண்ணம் ஏற்படவே செய்கிறது.

யோகி பாபு வரும் காட்சிகளில் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் விஜய்யுடன் சேர்ந்தோ, தனியாகவோ நம்மை சிரிக்க வைத்து விடுகிறார். குடும்ப நண்பராக பிரபு, நட்புக்காக திடீர் பரபரப்பு ஏற்படுத்தும் எஸ்ஜே சூர்யா, மினி வில்லனாக கணேஷ் வெங்கட்ராம், ஒரே காட்சியில் வந்தால் கூட சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் டி வி கணேஷ், ஸ்ரீமன் என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தங்களது வரவை ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிட்டு செல்கிறார்கள்.

தமனின் இசையில் ஏற்கனவே ஹிட்டான ரஞ்சிதமே பாடல் திரையரங்கிலும் உற்சாகத்துள்ளல் போட வைக்கிறது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் குவாரி சம்பந்தப்பட்ட காட்சிகளும் சரத்குமாரின் பிரம்மாண்ட வீடும் இன்னும் கண்ணிற்குளே நிற்கின்றன.
இயக்குனர் வம்சியின் படங்கள் அனைத்திலும் குடும்பம் என்கிற நூழிளையால் தான் கதை கட்டப்பட்டிருக்கும். இந்த படத்திலும் சகோதர உறவின் அவசியத்தையும் குழந்தைகளின் படிப்பும் எதிர்காலமும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைய வேண்டும் என்கிற ஒரு கருத்தையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் வம்சி. அந்த வகையில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்தான் இந்த வாரிசு.