ஹாரர் படங்களுக்கு என்றுமே வரவேற்பு உள்ளது என்பதாலும் போட்ட முதலுக்கு சேதாரமில்லாமல் திரும்பி வரும் என்பதாலும் பலரும் ஹாரர் படங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் அப்படி ட்ரீம் ஹவுஸ் என்கிற நிறுவனம் N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.

நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.

நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. ஹாரர் படக்காதலர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் இருக்கும்.