கடந்த 2021ல் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் தியேட்டர்களுக்கு இணையான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடைபெற்ற லாக்கப் மரணமும் அதைத்தொடர்ந்து அந்த உண்மையை வெளிக்கொண்டுவர நீதிக்காக போராடும் வழக்கறிஞர் சூர்யாவின் போராட்டமும் என விறுவிறுப்பான படமாக இது உருவாகி இருந்தது.
குறிப்பாக நிஜவாழ்க்கை சம்பவமாக இந்த படம் உருவாகி இருந்தது. இதன் உருவாக்கத்தில் நீதியரசர் சந்துரு மிக முக்கிய பங்கு வகித்தார். மணிகண்டன், தமிழ், விஜயன், லிஜோமோல் ஜோஸ் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் அருமையான நடிப்பை வழங்கி இருந்தனர்.
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகிறது. இதில் திரைக்கதை, வசனம், பாடல்கள் உருவாக்க அணியினரின் கலந்துரையாடல் மற்றும் நீதியரசர் சந்துரு, சூர்யா, ஞானவேல் ஆகியோரின் பிரத்தியோக பேட்டிகளும் இதில் அடங்கியிருக்கின்றன.
விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் இந்த ஜெய்பீம் புத்தகம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.