அப்பா, அத்தை, மனைவி, மகன் என கூட்டுக்குடும்பமாக வசிக்கும் லிங்காவுக்கு தலைக்கு மேல் கடன் பிரச்சனை. வெளியூரில் வசிக்கும் தங்கை காயத்ரிக்கும் அவறது கணவன் விவேக் பிரசன்னாவுக்கும் இதேபோல பணத்தேவை.. பிரச்சனைகளை சமாளிக்க தங்களது சிறிய வீட்டை விற்று, கிடைப்பதை ஆளுக்கு பாதியாக எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்து அப்பா சார்லியின் சம்மதத்தை கேட்கிறார்கள்.
அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள் எனக் கூறிவிட்டு வழக்கமாக தான் செல்லும் காம்ப்ளக்ஸ் ஒன்றுக்கு கிளம்பிச் செல்கிறார் சார்லி. கடன்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது என லிங்கா முழித்துக் கொண்டிருக்கையில், அப்பா சென்ற காம்ப்ளக்ஸ் இடிந்து விழுந்ததாகவும் பலபேர் இறந்து விட்டதாகவும் செய்தி வருகிறது. இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அரசாங்கம் நிதியுதவி அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தந்தை இறந்து விட்டதாக கருதி அந்த 20 லட்சம் வந்தால் ஆளுக்கு எவ்வளவு பங்கிட்டுக் கொள்ளலாம் என துயரத்தை மறந்து பணக்கணக்கு போட ஆரம்பிக்கின்றனர் வாரிசுகள். மார்ச்சுவரிக்கு பாடியை வாங்க செல்லலாமென வாசலைத் திறந்தால் எதிரே உயிருடன் நிற்கிறார் தந்தை.. அடுத்து என்ன நடக்கிறது ? கடன் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது மீதிக்கதை.
ஒரு அழகான கீழ்த்தட்டு குடும்பம்.. அதில் கூட்டுக்குடும்ப நடைமுறை, அண்ணன் தங்கை சொத்து பிரிக்கும் தகராறு என அனைத்தையும் கலந்து கட்டி படம் நெடுக அதற்குள் ஒரு டார்க் காமெடியை புகுத்தி விலா நோக சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
யதார்த்தமான கதாபாத்திரத்தில் லிங்காவின் நடிப்பு இன்னும் படு எதார்த்தம். கடன் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு அவர் படும் பாடு, அதிலிருந்து வெளிவர எப்படியாவது சொத்தை விற்று விடலாம் என தங்கையுடன் சேர்ந்து போடும் திட்டம் எல்லாம் தவிடுபொடியானதும் ஏற்படும் விரக்தி, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற முனைப்பு எ இன்றைய சராசரி ஒரு இளைஞனை கண்முன் நிறுத்துகிறார் லிங்கா.
அவருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பது போல அவரது தங்கையாக காயத்ரி.. காமெடியிலும் இறங்கி அடித்திருக்கிறார்.. என்னதான் தந்தை என்றாலும் பணம் என வரும்போது அவரது சாவு கூட சாதாரணமாக டீல் பண்ண படுவதை லாஜிக் மீறாத காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அண்ணன் தங்கை இருவரும்.
காயத்ரியின் கணவனாக நிலா அப்பாவாக நடித்துள்ள விவேக் பிரசன்னாவின் நடிப்பில் நாளுக்கு நாள் மெருகேற்றும் தெரிகிறது. குறிப்பாக காமெடியில் மனிதர் பின்னுகிறார்.. லிங்காவின் மனைவியாக நடித்துள்ள அபர்ணதி பாந்தமான, அதேசமயம் மெலிதான நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்கிறார்.
கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக என்ட்ரி கொடுத்து கலகலப்பூட்டுகிறார் கே பி ஒய் தீனா. அப்பாவாக சார்லி.. அவரைப்பற்றி சொல்லவே தேவையில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அத்தையாக யூடியூப் புகழ் நக்கலைட்ஸ் அம்மா.. செலக்டிவ் அம்னீசியாவில் சிக்கியவராக காமெடி காட்சிகளில் கலங்கடிக்கிறார். பேரனாக தர்ஷித் சந்தோஷ், பேத்தியாக மான்யாஸ்ரீ இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் கிளைமாக்ஸை தர்ஷித் சந்தோஷ் கச்சிதமாக முடித்து வைக்கிறான்.
ஒரே ஒரு வீடு.. அந்த வீட்டிற்குள்ளேயே மொத்த படத்தையும் எந்தவித தொய்வும் இல்லாமல் கலகலப்பாக படமாக்கியதற்காகவே இயக்குனர் கார்த்திக் சீனிவாசனை பாராட்டலாம். குறிப்பாக அந்த ஒரே வீட்டிற்குள் போரடிக்காமல் காட்சிகளை நகர்த்த உதவியிருக்கும் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது என்றால், குழப்பமில்லாத படத்தொகுப்பு மூலம் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்ட எடிட்டர் மதனும் இந்தப்படத்தின் சுவாரஸ்யத்திற்கு ஒரு பக்க பலமாக நிற்கிறார்.
தியேட்டரில் ரிலீசானாலே கூட ஜாலியாக பார்த்து இந்த படத்தை ரசிக்கலாம். ஆனால் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. உடனடியாக பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு ஜாலியான படம் தான் இந்த உடன்பால்.