இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி, காலா என அடுத்தடுத்த படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு பெற்று குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்தவர். அதேசமயம் மிகப்பெரிய ஹீரோ என்றாலும் கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் தனது கதைக்கான கதாபாத்திரங்களாக அவர்களை மாற்றுவதில் வல்லவர்.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் ஜொலிக்கிறது என தனது படங்கள் ஒவ்வொன்றிற்குமே மாறுபட்ட கதை களங்களை கையிலெடுத்து படம் இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.
இந்த நிலையில் தற்போது மார்கழி மக்களிசை என்கிற இசைத்திருவிழாவை தனது நீலம் பண்பாட்டு மையம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக நடத்துகிறார் பா ரஞ்சித். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அப்போது யுவன் பேசும்போது விரைவில் பா ரஞ்சித்துடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளேன் என்கிற தனது விருப்பத்தையும் வெளியிட்டார்.
பெரும்பாலும் அவருடன் துவக்க காலத்தில் இருந்தே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார் பா ரஞ்சித்.
இந்த நிலையில் யுவன் இப்படி கூறியதை தொடர்ந்து கூட்டணி இணைந்தால் அற்புதமான பாடல்கள் கிடைக்கும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.