பொன் மாணிக்கவேல், பஹீரா ஆகிய படங்களை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படம் உல்ஃப். இந்த படத்தை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் சின்ட்ரெல்லா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது பிரபுதேவாவை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக ராய்லட்சுமி, அனுசுயா பரத்வாஜ் நடிக்க, முக்கிய வேடங்களில் வசிஸ்ட சிம்ஹா ஆர்ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தயாரிப்பதன் மூலமாக கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தோஷ் புரடக்சன்ஸ் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறது.
அறிவியல் பேண்டஸி படமாக உருவாகியுள்ள இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கலந்து உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு புதுச்சேரி. அந்தமான். பெங்களூரு .சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எதற்காக இந்த படத்தின் தலைப்பு உல்ஃப் என வைக்கப்பட்டுள்ளது என்று படத்தின் இயக்குனர் கூறும்போது, படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகன் இருவருமே ஓநாயின் குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பது தான் கதைக்கரு என்கிறார்.
இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.