இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, அவரது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ஈரம் என்கிற தன்னுடைய முதல் படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். அதை தொடர்ந்து ஈரம் அறிவழகன் என்றே பெரும்பாலும் அழைக்கப்பட்டு வருகிறார்.
அந்த அளவிற்கு ஹாரர் படங்களில் ஒரு ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கை அந்தப்படத்தில் காட்டியிருந்தார் அறிவழகன். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஆதிக்கு அந்தப்படம் மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த படம் வெளியாகி 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றிற்காக அறிவழகனும் ஆதியும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்திற்கு சபதம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது இந்த நிகழ்வில் நடிகையும் ஆதியின் மனைவியுமான நிக்கி கல்ராணி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அறிவழகன், ஆதி இருவரையும் தவிர ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனும் இவர்களுடன் இந்த சபதத்தை நிறைவேற்ற கூட்டணி சேர்ந்துள்ளார்.
இயக்குனர் அறிவழகனை பொருத்தவரை கடந்த சில வருடங்களாக நடிகர் அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இவர் இணைந்துள்ளது மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.