சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2005ல் வெளியாகி கிட்டத்தட்ட 806 நாட்கள் தொடர்ந்து ஓடி மிகப்பெரிய வெற்றியை குவித்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாராவுக்கு இந்த படத்தின் வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் என பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தார் பி.வாசு. ஆனால் கதாநாயகியாக சூப்பர்ஸ்டாருக்கு பதிலாக அவரது சிஷ்யன் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பே தாம்தூம் என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஜீவாவால் தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் தான் கங்கனா ரணவத். அதன்பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர் கடந்த வருடம் வெளியான தலைவி படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பெரும்பாலும் பாலிவுட்டில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் கங்கனா இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமானவர் தான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.