தமிழ் சினிமாவில் எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்கு பிறகு அந்த இடத்தை நிரப்பும் விதமாக செயல்பட்டு வருபவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். இவர் தற்போது மணிரத்னம் ஷங்கர் ஆகியோரின் படங்களில் கதை மற்றும் வசனத்தில் தனது முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தநிலையில் இவர் எழுதிய கைதிகள் என்கிற சிறுகதை தற்போது ரத்த சாட்சி என்கிற திரைப்படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தை இயக்குனர் ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், OAK சுந்தர், பிரவீன், ஹரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர் ‘ஆஹா தமிழ் ‘ ஓடிடி தளத்தில் இப்படத்தை 9 டிசம்பர் 2022 முதல் கண்டுகளிக்கலாம்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த படம் குறித்து இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் பேசும்போது, “ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார்.
பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.