ஜல்லிக்கட்டை மையப்படுத்தி சில படங்கள் வந்திருக்கின்றன.. ஆனால் ஜல்லிக்கட்டு நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அது கிராமத்து மனிதர்களின் வாழ்வில் எப்படி இரண்டற கலந்துள்ளது என்பதையும் புதிய கோணத்தில் சொல்லியுள்ள படம் இந்த காரி.
அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காரி. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நரேன், பார்வதி அருண், இந்த அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
சென்னையில் தனது அப்பாவின் அரவணைப்பின் கீழ் குதிரை ஜாக்கியாக வேலை செய்யும் சசிகுமார், தந்தையின் மறைவுக்கு பிறகு சூழ்நிலை காரணமாக தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதற்காக சபதம் எடுக்கிறார்
அது அந்த காலையின் உயிரை காப்பாற்றும் போராட்டமாக மட்டுமல்ல, தனது கிராமத்தின் பெருமையையே மீட்கும் போராட்டமாகவும் மாறுகிறது. இறுதியில் சசிகுமார் சாதித்தாரா ? இல்லையா? என்பதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கும் படமே சசிகுமாரின் “காரி”.
வழக்கம்போல் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஆற்றலை சசிகுமார் திறமையாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த சில படங்களின் தோல்வியால் தளர்ந்திருந்த சசிகுமாருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம். அவருக்காக எழுதப்பட்ட கதை ஆகவே இந்த படம் இருக்கிறது.
படம் முழுக்க நகைச்சுவை இல்லை என்றாலும் ரசிக்கும்படியான காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சசிகுமார். கிளைமாக்ஸில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
கதாநாயகியாக வரும் பார்வதி அருண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் ஆசையாக வளர்த்த காளை காணவில்லை என்றதும் தரையில் புரண்டு கதறி அழும் காட்சியிலேயே தான் திறமையான நடிகை என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்..
ஆடுகளம் நரேனுக்கு மற்றுமொரு நல்ல கதாபாத்திரம், வழக்கம்போல கலக்கியிருக்கிறார். குணச்சித்திர வேடங்களில் வரும் அம்மு அபிராமி, பாலாஜி மோகன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பு அருமை.
மண்வாசம் மாறாமல், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும், மக்களின் நிலைமையும் அழகாக சொல்லி இருக்கிறார். இதற்கு பக்கபலமாக இமானின் பின்னணி இசை இருந்திருக்கிறது.
கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக கடைசி 20 நிமிடங்கள் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் மெய்சிலிப்பை ஏற்படுத்துகின்றன, வாடிவாசலுக்கு சென்று திரும்பிய ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிகளை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவிற்கு சல்யூட்.
அறிமுக இயக்குனர் தான் என்றாலும் இயக்குனர் ஹேமந்த், முதல் படத்திலேயே பிரமாண்டமான ஜல்லிக்கட்டை கையில் எடுத்துள்ள துணிச்சலை பாராட்ட வேண்டும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிக்கு சற்று முன்னதாக ஊர்மக்களை அவர்களை அறியாமலே தூண்டிவிட்டு சசிகுமார் நினைத்ததை சாதிக்கும் காட்சி எதிர்பாராத ட்விஸ்ட். அந்தவகையில் . நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் காரி படம் நன்றாக இருக்கிறது