தமிழ் திரையில் எப்படி தற்போதும் முன்னணி நட்சத்திரங்களாக நடிப்பில் இரு துருவங்களாக ரஜினி, கமல் இருவரும் கோலோச்சி வருகிறார்களோ, மலையாளத்தில் எப்படி மம்முட்டி, மோகன்லால் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்களோ அதே போன்று இன்னும் தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்கிற காம்பினேஷனுக்கு ஸ்டார் வேல்யூ எந்த வகையிலும் குறையவில்லை.
இதில் சிரஞ்சீவியாவது இடையில் அரசியல் என சில காலம் ஒதுங்கி மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி உள்ளார். ஆனால் நடிகர் பாலகிருஷ்ணா சினிமாவில் இடைவிடாது தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் வால்டர் வீரையா என்கிற படத்திற்காக ஒரு சிறப்பு பாடலை இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து எழுதி பாடி இருந்தார். சமீபத்தில் வெளியான அந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சிரஞ்சீவிக்கு ஒரு பாடல் வெளியானால் பாலகிருஷ்ணாவுக்கும் ஒரு பாடல் வெளியாகத்தானே வேண்டும். அந்தவகையில் பாலகிருஷ்ணா தற்போது நடித்துவரும் வீர சிம்ஹா ரெட்டி என்கிற படத்தில் இருந்து ஜெய் பாலைய்யா என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு இசை அமைப்பாளர் எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார் இந்த படத்தை பிரபல இயக்குனர் கோபிசந்த மலினேணி இயக்கிவருகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிரஞ்சீவி படத்திலும் சரி, இந்த பாலகிருஷ்ணா படத்திலும் சரி, ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த ஜெய் பாலைய்யா எனத் தொடங்கும் பாடல் பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கான கீதம் ஆகவே அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்… ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம்… என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.