ஒரு பக்கம் கமர்சியல் படங்கள் வெற்றிகளை குவித்து கோடிகளை அள்ளி வருகின்றன. அதேசமயம் இன்னொரு பக்கம் எளிமையான படைப்புகள் வெளியாகி கோடிகளுக்கு பதிலாக அதற்கு சமமான அல்லது அதைவிட உயரிய சர்வதேச திரைப்பட விழா விருதுகளை தட்டிச் செல்கின்றன.
அந்தவகையில் தமிழில் உருவாகியுள்ள கிடா என்கிற திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இந்தப்படம் முடிந்ததும் அங்கே இருந்த மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளனர்.
இந்த படத்தை ரா.வெங்கட் என்பவர் இயக்கியுள்ளார். மறைந்த குணசித்திர நடிகர் பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவன், அவனது தாத்தா மற்றும் அவர்கள் வளர்க்கும் ஒரு ஆடு இவர்கள் மூவருக்கும் உள்ள பிணைப்பை பற்றி இந்த படம் சொல்கிறது.