பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் முதல் சின்ன ஹீரோக்கள் வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களின் டைட்டில்கள், அது கிடைக்காதவர்கள் அவரது படங்களின் பஞ்ச் வசனங்கள், அவர் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் வரிகள் என ஏதோ ஒன்றை தங்களது படத்திற்கு டைட்டிலாக சூட்டிக் கொள்ள வேண்டுமென ஆசைப்படுவது வழக்கம் தான்,

பலருக்கு அப்படி கிடைத்துள்ளது. இப்போது விமலின் டர்ன். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் இசையமைப்பில் வெளியான துடிக்கும் கரங்கள் படத்தின் டைட்டிலை தற்போது விமல் நடித்து வரும் படத்திற்கு சூட்டியுள்ளார்கள்.

இந்த படத்தை வேலுதாஸ் என்பவர் இயக்கியுள்ளார். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் பிரபல இயக்குனர்களின் முன்னிலையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, “சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும்போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளவர். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது.

இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை.. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்