தமிழ் திரையுலகில் தேனிசை தென்றல் என்கிற அடைமொழியுடன் வலம் வந்தவர் இசையமைப்பாளர் தேவா. 90களின் துவக்கத்தில் இசையமைப்பாளராக நுழைந்த இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலை படத்திற்கு இசை அமைத்த பின்னர் இளையராஜாவுக்கு அடுத்தபடியாக முன்னணி இசையமைப்பாளராக மாறினார். தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாட்ஷா. அருணாச்சலம் ஆகிய படங்களுக்கு இசை அமைத்து காலத்தால் அழியாத ஹிட் பாடல்களை கொடுத்தார்.

அதுமட்டுமல்ல கடந்த 30 வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் துவக்கத்தில் இடம்பெறும் டைட்டில் கார்டு இவர் அண்ணாமலை படத்திற்காக ஸ்பெஷலாக உருவாக்கி கொடுத்தது தான் இன்றுவரை அவரது படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் ரஜினி ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இவர் என்று சொன்னால் அது மிகையில்லை. அதுமட்டுமல்ல நடிகர் விஜய்யின் ஆரம்பகால திரையுலக பயணத்தில் இவரது பாடல்கள் அவருக்கு வெற்றியையும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அறிமுகத்தையும் பெற்றுத்தந்தது. குறிப்பாக விஜய்யை ஒவ்வொரு படங்களிலும் பாட வைத்து அழகு பார்த்தவர் தேவா.

அதேபோல அஜித்துக்கும் ஆசை, வான்மதி, வாலி என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேவா. அதுமட்டுமல்ல கானா பாடல்களில் இவர் தான் கிங் என்பது போல ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கும் பல கானா பாடல்களை கொடுத்தவர்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து மெதுவாக ஒதுங்கினாலும் இன்னிசை கச்சேரிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார் தேவா. அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா இன்று பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் தேவா திரையுலகில் நுழைந்து 30 ஆண்டுகள் கொண்டாடும் விதமாக தேவாதிதேவா என்கிற பெயரில் இசை உற்சவம் ஒன்றை நடத்தினார்கள். இதனை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் பொறுப்பேற்று நடத்தியது.

இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினி நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது மேடையிலேயே கேக் வெட்டி அதை சூப்பர் ஸ்டாரும் தேவாவும் ஒருவருக்கு ஒருவர் ஒட்டிக்கொண்ட அந்த நிகழ்ச்சி காணக் கண்கொள்ளா நிகழ்ச்சியாக இருந்தது.

மேலும் இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் மீனா, தேவயானி, மாளவிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
