ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள படம் டிரைவர் ஜமுனா. வத்திக்குச்சி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் கின்ஸ்லி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
மேலும் இந்த படத்திற்காக் பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கென பிரத்தியேக பிரிவியூ காட்சியும் திரையிடப்பட்டது. இந்தநிலையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி வெளி வராது என்று தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறும்போது, ‘நவம்பர் 11 ஆம் தேதி அன்று வெளியாவதாக இருந்த எங்கள் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம்.
அத்துடன் மிக விரைவில் திரைப்படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர இருக்கும் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்கள் மேலான ஆதரவிற்கும் அன்பிற்கும் தலை வணங்குகிறோம்” என்று அதில் கூறியுள்ளனர்.
இதுபற்றி திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த வாரம் வெளியான லவ்டுடே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதால் அதற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் அசோக்செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படமும் கடந்த வாரம் வெளியாகி சீராக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் குறைந்தது நான்கு படங்களுக்கு மேல் வெளியாக இருக்கின்றன. அதில் சமந்தா நடித்துள்ள யசோதா படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டிரைவர் ஜமுனா படத்திற்கு குறைந்த அளவிலான திரையரங்குகளே கிடைக்கும் சூழல் இருந்ததால் தான், படத்தை வேறு ஒரு தேதியில் ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது..