தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் வெளியானால் அது இந்தியா பாகிஸ்தான் போட்டி போல விறுவிறுப்பாக இருக்கும். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு பின்னர் விஜய்-அஜித் படங்கள் ஒரேநாளில் வெளியாவது திருவிழா கோலமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் இது குறித்து அவ்வப்போது சோசியல் மீடியாவில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகவே தான் இருந்து வருகிறது.
அதனாலேயே இந்த இருவரின் படங்களும் பெரும்பாலும் ஒரே சமயத்தில் ரிலீசாகாமல் வெவ்வேறு நாட்களில் வெளியாகி வருகின்றன. வீரம், ஜில்லா ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஒரே சமயத்தில் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.
இந்த நிலையில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வாரிசு படத்தை வெளியிடுவது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் உதயநிதி துணிவு படத்தை வெளியிடுவதால் அந்த படத்திற்கு அதிக திரையரங்குகளும் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளில் கிடைக்கும் என சோசியல் மீடியாவில் சிலர் தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை பரப்பி வந்தனர்.
ஆனால் சமீபத்தில் இது குறித்த ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டபோது இரண்டு படங்களுக்குமே சம முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும்.. இது குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என உறுதிபட கூறி விட்டார் உதயநிதி ஸ்டாலின். இனி ரசிகர்கள் இதுகுறித்து கருத்து மோதலில் ஈடுபடாமல் படத்தை கொண்டாடுவதற்கு தயாராக வேண்டும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.