இசையமைப்பாளர் இமான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான முதல் படம்.. உலக அழகி பிரியங்கா சோப்ரா முதல்முதலாக கதாநாயகியாக தமிழில் நடித்த படம் என்ற பெருமையை பெற்ற படம்தான் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தமிழன் திரைப்படம். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மஜீத்.
அதைத்தொடர்ந்து துணிச்சல், டார்ச்லைட் ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது விமல், யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை இவரே தயாரித்தும் வருகிறார்.

இந்த படத்தின் கதை குறிப்பு மஜீத் கூறும்போது, ‘இன்று உலகில் எல்லா இடங்களிலும் புரோக்கர் மயமாகி விட்டது. அதில் சிலர் தங்கள் சுயநலத்திற்காக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது.

அப்படி பாதிக்கப்படும் மக்களை படத்தின் நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் கலந்து ஜனரஞ்சகமாக சொல்லி இருக்கிறோம் என்று கூறுகிறார்.
இந்த படத்தில் விமல் ஜோடியாக சாம்மிகா என்பவர் நடிக்க ஐஸ்வர்யா தத்தா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபுவுடன் மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், பவர்ஸ்டார் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றுள்ளது. வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் அரண்மனை போன்ற இடத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டு உள்ளனர்.